நானே பிரதமர் – காட்போட் அமைச்சரவை செல்லுபடியாகாது! மைத்திரி – மஹிந்த கூட்டணிக்கு ரணில் பதிலடி!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சவாலுக்குட்படுத்துவதாக இருந்தால், நாடாளுமன்றத்தில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு மஹிந்த, மைத்திரி கூட்டணிக்கு சவால் விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க.


நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே பிரதமர் இவ்வாறு சவால் விடுத்தார்.

“ மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்த பிரேரணைக்கு, 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். அதன்படி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கமொன்று அமைக்கப்படும் எனின், அந்த அரசாங்கம் மீது எவ்வித நம்பிக்கையும் இல்லை என்பதை இன்று தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, அரசியலமைப்பின் 42ஆவது சரத்திற்கு அமைய அந்த அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என அறிவிக்கப்பட்டது. அத்துடன், 3 வர்த்தமானி அறிவித்தல்களும் சட்டத்திற்கு புறம்பானது எனவும் அறிவிக்கப்பட்டது.
பிரதமரை நீக்கும் வர்த்தமானி, புதிய பிரதமரொருவரை நியமிப்பதற்கான வர்த்தமானி ஆகியன சட்டத்திற்கு புறம்பானவை எனவும் அறிவிக்கப்பட்டது.

மக்களின் ஆணையை உறுதிப்படுத்தும் வாக்கெடுப்பொன்று இன்று நடைபெற்றது. இது மக்கள் ஆணையின் வெற்றியாகும். இந்த அரசாங்கம் கூறும் அமைச்சர்களுக்கும் பெயர்பதாகை போடப்பட்டுள்ள அமைச்சர்களுக்கும் காட்போட் அமைச்சரவைக்கும் எவ்வித அதிகாரமும் இல்லை என்பதை அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸாருக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

ஆகவே, தற்போது முதல், உயர்நீதிமன்றம் நேற்று வழங்கிய தடையுத்தரவு மற்றும் பாராளுமன்றத்தின் இன்றைய தீர்மானத்திற்கு அமைய, இவை அனைத்தும் சட்டத்திற்கு புறம்பாக முன்னெடுக்கப்படும் ஆட்சியாகும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *