மஹிந்தவால் மட்டுமே வடக்கு மக்களின் பிரச்சினையை தீர்க்க முடியும் – கெஹலிய சுட்டிக்காட்டு!

தெற்கு மக்களின் மனங்களை வென்ற மஹிந்த ராஜபக்சவால் மாத்திரமே, வடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்கமுடியும். இதை தமிழ் மக்களும் உணரவேண்டும் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.


கண்டியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்துக்கு நாடாளுமன்றத்தில் தீர்வைக்காணும் சூழ்நிலை இல்லை. சபாநாயகர் பக்கச்சார்பாக செயற்படுகின்றார். எனவேதான், முடிவெடுக்கும் அதிகாரத்தை மக்களிடம் கையளிக்கும் வகையில் பொதுத்தேர்தலை ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதுவே உயரிய ஜனநாயகப் பண்பாகும்.

தென் பகுதி மக்கள் மனதை வெகுவாக வென்றவர்தான் மகிந்த ராஜபக்ச. எனவே, வடபகுதி மக்களுக்கு தீர்வைத் தரக் கூடிய ஒருவர் தெற்கு மக்களது மனதை வென்ற ஒருவராகவே இருக்கவேண்டும் என்பதை வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் உணரவேண்டும்.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சியால் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளன. நாட்டையும், நாட்டு வளங்களையும் விற்பனை செய்யும்; நடவடிக்கையிலேயே ஐக்கிய தேசியக்கட்சி இறங்கியது. இதனாலேயே உள்ளாட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியை மக்கள் நிராகரித்தனர்.

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததும் உடனடியாக அலரி மாளிகையை கையளித்து வெளியேறினார். ஆனால் இன்று அலரி மாளிகை ஒரு கேலிக் கூத்தான இடமாக்கப்பட்டுள்ளது. அங்கு சூது வினையாடும் இடமாகவும் களியாட்ட இடமாகவும் மாற்றப்பட்டுள்ளது.

கட்சியின் ஊடகப் பேச்சாளராக நானும், அரசின் ஊடகப் பேச்சாளராக மகிந்த சமரசிங்கவுடன் நாhனுமாக கடமையாற்றுகிறோம். சர்வதேச ஊடகங்களுடனான சந்திப்பின் போது குழுவாக இயங்குவோம். நான் பல அரச உயர் அதிகாரிகளுடன் அலரி மாளிகை பற்றி கலந்துரையாடினேன். அது பொதுச் சொத்து என்றும் அதனை தற்போது பதவி நீக்கப்பட்டவர்கள் பாவிப்பது சட்டவிரோதமானது என்றும் கூறினர்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *