கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம் – ஹக்கீம், ரிசாட் ஜனாதிபதியுடன் பேச்சு! கலக்கத்தில் ரணில்!!

இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இருவர், இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசியுள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோரே, ஜனாதிபதியை இன்று காலை சந்தித்துப் பேசியுள்ளனர்.

இவர்கள் இருவரும் கலைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்து வந்தனர்.

முன்னதாக நேற்றைய தினம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் சந்தித்துப் பேசியிருந்தார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவைளிப்பதாக றிசாட் பதியுதீன் தெரிவித்திருந்த நிலையில், அவருடைய கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்ததோடு, புதிய அரசாங்கத்தில் பிரதியமைச்சுப் பதவியைப் பெறுவதற்கும் முயற்சித்ததாக உள்ளுர் ஊடகங்களில் நேற்று செய்தியொன்று பரவியது.

இந்த செய்திக்குப் பின்னரே, ஜனாதிபதியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் சந்தித்திருந்தார்.

இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவரின் போட்டிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுடனும் சமகால அரசியல் குறித்து நேற்றைய தினம் பேசியதாக, முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனும் இன்று காலை ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.

இருந்தபோதும், இந்த சந்திப்பு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் எந்தத் தரப்பிலிருந்தும் இதுவரை வெளியிடப்படவில்லை.

ரஊப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு 07 உறுப்பினர்களும், றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு 05 உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் உள்ளனர்.

இந்தக் கட்சிகளின் தலைவர்கள் இருவரும் இன்று ஜனாதிபதியைச் சந்தித்தமையினை அடுத்து, மஹிந்த ராஜபக்ஷவுக்கு இவர்கள் ஆதரவளிக்கும் நிலைப்பாட்டினை எடுப்பார்கள் எனும் எதிர்பார்ப்பு அரசியலரங்கில் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *