நாடாளுமன்றில் மஹிந்தவை எதிர்க்க கூட்டமைப்பு முடிவு! – நடுநிலை வகிப்பதென்பது அராஜகம் எனவும் தெரிவிப்பு

அரசமைப்பை முற்றிலும் மீறுவதாகவும் சட்டவிரோதமாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதாக முடிவெடுத்துள்ளது.

நடுநிலை வகிப்பதென்பது அராஜகம் எனவும், அது மஹிந்த அரசு வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கக்கூடிய ஜனநாயக விரோத செயல் எனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இது தொடர்பில் கூட்டமைப்பு இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி, நாடாளுமன்ற அமர்வுகள் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கைகள் சம்பந்தமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் உயர்மட்டக் குழுக் கூட்டம், நேற்றுப் பிற்பகல் 5 மணிக்கு கூடி ஆராய்ந்து, பின்வரும் தீர்மானங்களை எடுத்துள்ளது.

01) இலங்கை அரசமைப்பின் பிரகாரம் பதவியிலிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை. 19ஆவது திருத்தத்துக்கு முன்னர் ஜனாதிபதிக்குக் கொடுக்கப்பட்டிருந்த அந்த அதிகாரம், 19ஆவது திருத்தத்தின் மூலம் திட்டவட்டமாக நீக்கப்பட்டது.

ஆகையால், பிரதமரை நீக்குவதாகவும், வேறொருவரை பிரதமராக நியமிப்பதாகவும் பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்புகள் அரசமைப்புக்கு முரணானதும் சட்டவிரோதமானவையுமாகும்.

02) மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளை நிறுத்தியதாக ஜனாதிபதி விடுத்த பிரகடனத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக விரோத செயலாகவும், நாடாளுமன்றத்தின் மீயுயர் தன்மையைப் பாதிக்கின்ற செயலாகவுமே நோக்குகின்றது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாத மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக அறிவித்துவிட்டு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை அவர் நிரூபிக்க வேண்டிய தேவையைத் தாமதிப்பதற்கும் முறியடிப்பதற்கும் எதுவாக செய்யப்பட்ட கால நீடிப்பே இதுவாகும்.

இக்கால நீடிப்பை உபயோகித்து அமைச்சுப் பதவிகளையும் பணத்தையும் இலஞ்சமாகக் கொடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கத்துக்கு முறைகேடாக இழுத்தெடுத்து, நாடாளுமன்றப் பெரும்பான்மையைக் கபடமாகப் பெறுவதற்கு புதிய அரசு முயல்கின்றது. இது ஜனநாயக விரோத செயலாகும்.

03) மேற்சொல்லப்பட்ட காரணங்களுக்காக, அரசமைப்பை முற்றிலும் மீறுவதாகவும் சட்டவிரோதமாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும். இத்தகைய சந்தர்ப்பத்தில் ‘நடுநிலை’ வகிப்பதென்பது அராஜம் – அது வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கக்கூடிய ஜனநாயக விரோத செயல் என்பதே எமது நிலைப்பாடு” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *