தமிழ்ப் பத்திரிகையாளரை அருகில் வைத்துக்கொண்டு சம்பந்தனுடன் மஹிந்த பேசியது என்ன?

இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்‌ஷ தமது அரசுக்கு ஆதரவு நல்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று பல தடவைகள் தொலைபேசி ஊடாக கோரியிருக்கின்றார்.

நேற்றுக் காலை முதலாவது தொலைபேசி அழைப்பு உரையாடல் இடம்பெற்றபோது மஹிந்தவுக்கு அருகில் தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவரும் இருந்துள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து இந்த முதலாவது தொலைபேசி அழைப்பை சம்பந்தனுக்கு மஹிந்த எடுத்தார்.

காலையில் தனது சாப்பாட்டு மேசையில் தமது மூத்த மகனும் எம்.பியுமான நாமல் ராஜபக்‌ஷ மற்றும் மற்றைய மகனான யோஷித ராஜபக்‌ஷ ஆகியோருடன் காலை உணவாகப் பால் சோறு சாப்பிட்டார் அவர். அச்சமயம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்குக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் மிகவும் பரிச்சயமான தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவரும் அந்தச் சாப்பாட்டு மேசையில் ராஜபக்‌ஷாக்களுடன் இருந்தார்.

அந்தத் தமிழ்ப் பத்திரிகையாளரிடமே சம்பந்தனுடன் தொலைபேசி இணைப்பை ஏற்படுத்தித் தருமாறு மஹிந்த ராஜபக்‌ஷ கோரினார். அந்தப் பத்திரிகையாளரும் தமது தொலைபேசியில் சம்பந்தனுடன் இணைப்பை ஏற்படுத்தி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கொடுத்தார். இருவரும் முதலில் வந்தனங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

பிறகு, பிரதமராகப் பொறுப்பேற்ற மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாழ்த்துக் கூறினார் சம்பந்தன். தொடர்ந்து தமக்குக் கூட்டமைப்பின் ஆதரவைக் கோரினார் மஹிந்த.

“உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் முரண்பாடு, காழ்ப்புணர்ச்சி ஏதும் இல்லை. அரசியல் நிலைப்பாடுகளில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அவ்வளவுதான். நாங்கள் பகையுணர்வு கொண்டவர்கள் அல்லர். நாங்கள் இணைந்து செயலாற்ற முடியும்.

எங்களின் பங்காளிக் கட்சிகளுடன் இது குறித்து விரிவாகப் பேசுவோம். நாங்கள் இணைந்து செயற்படலாமா என்பதைக் காண்டறிந்து உங்களுக்கு ஒரு சாதகமான பதிலைத் தர முடியுமா என்று பார்க்கின்றேன். விரைவில் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்” – என்று பதிலளித்தார் சம்பந்தன்.

இந்த உரையாடல் தமக்குத் திருப்தி தந்ததாக உணவு மேசையில் தம்முடன் அமர்ந்திருந்த தமிழ்ப் பத்திரிகையாளரிடம் தெரிவித்தார் மஹிந்த. சம்பந்தனுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதோடு, மேலதிக விடயங்களை அவ்வப்போது தமக்குத் தெரியப்படுத்துமாறும் அந்த ஊடகவியலாளரைக் கேட்டுக்கொண்டார் மஹிந்த ராஜபக்‌ஷ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *