முகூர்த்தம் நடக்கும் முன்பே முறிந்து போகும் திருமணங்கள் ! கவலைப்படும் இளம் பெண்கள் !!

இது கசப்பான உண்மை! மகள்களுக்கு திருமணம் நிச்சயித்து, முகூர்த்த நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், சில பெற்றோர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.

அதனால், அவர்களுக்கு ஏற்கனவே இருந்துகொண்டிருக்கும் நோய்களின் தாக்கம் அதிகமாகி, மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்படும் சூழ்நிலையும் உருவாகிறது. ‘கடைசி நேரத்தில் ஏதாவது பிரச்சினையால் திருமணம் நின்றுபோய்விடுமோ?’ என்ற பயம்தான் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட காரணம்!

அவர்களுடைய பயத்தை அதிகப்படுத்துவதுபோல்தான் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் சில மணமேடை ஏறும் முன்பே முறிந்துபோய் விடுகின்றன. முன்பு திருமணம் முடிந்த சில மாதங்களிலே சேர்ந்து வாழப்பிடிக்காமல் ஜோடிகள் பிரிந்தார்கள். இப்போது திருமணத்திற்கு சில மாதங்களோ, சில வாரங்களோ இருக்கும்போதே நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துவிட்டு பந்தத்தை முறித்துக் கொள்ளும் ஜோடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். தனது குடும்பத்திலும் அப்படி நடந்து விடுமோ என்ற கவலை சில பெற்றோரை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.
நிச்சயதார்த்தம் நடத்திவிட்டு, திருமணத்தை எட்டாமலே முடிந்துபோன சில சம்பவங்களால் பாதிக்கப்பட்ட சிலரை தொடர்ச்சியாக கவுன்சலிங்கில் சந்திக்க வேண்டிய சோகம் சமீபத்தில் நிகழ்ந்தது. அந்த சம்பவத்தில் சிலவற்றை சொல்கிறேன்!
முதல் சம்பவத்தில் இருதரப்பினரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். நிச்சயதார்த்த விழாவில் இருவரும் பொருத்தமான ஜோடிகள் என்று புகழப்பட்டார்கள். அந்த இளைஞன் வெளிநாட்டில் படித்தவன். அந்த பெண் இங்கேயே நிறைய கற்றவள். இருவரும் மனம் விட்டுப்பேசினார்கள். நன்றாக சிந்தித்துதான் திருமணத்திற்கு சம்மதமும் தெரிவித்தார்கள். முகூர்த்த நாள் குறிக்கப்பட்டது.
கல்யாண வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தபோது, நிச்சயதார்த்த ஜோடி அவ்வப்போது செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது சில நாட்கள் அவள் தனது பாய் பிரண்ட்டுடன் சுற்றிக்கொண்டிருப்பது அவனுக்கு தெரியவந்தது. ஒருநாள் இரவு அவள் சம்பந்தம் இல்லாமல் ஓட்டலில் தங்கியதும் அவன் கவனத்திற்கு வந்தது. அவளிடம் அதுபற்றி அவன் கேட்டபோது,
‘திருமணத்திற்கு முன்பே என்னை கண்காணிக்கும் வேலையை தொடங்கி விட்டீர்களா?’ என்று ஆத்திரப்பட்டாள். வாக்குவாதம் முற்றிவிட்டது. இருதரப்பு பெற்றோரும் அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார்கள். கவுன்சலிங்கில் ‘அந்த திருமணம் வெற்றிகரமாக அமையாது’ என்பது உணர்த்தப்பட்டது. மிகுந்த மனவலியோடு அந்த திருமணம் ரத்து செய்யப்பட்டது.
இரண்டாவது சம்பவத்தில், நிச்சயதார்த்தத்திற்கு பின்பு அந்த இளைஞனின் நடவடிக்கைகள் பெண்ணுக்கு பிடிக்கவில்லை. அதனால் தனது தாயாரிடம், ‘அவனை என்னால் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்க்கை நடத்த முடியாது. திருமணத்தை ரத்து செய்து விடுங்கள்’ என்று கூறி விட்டாள். ஆனால் பெண்ணின் அம்மாவுக்கோ அந்த இளைஞன் மீது நல்ல அபிப்பிராயம்.
‘அவனை போன்று இன்னொரு நல்ல பையன் உனக்கு கிடைக்க மாட்டான். உனக்கு பிடிக்காத ஒருசில விஷயங்கள் அவனிடம் இருந்தாலும், திருமணம் செய்து கொள். திருமணத்திற்கு பின்பு அவனிடம் நீ விரும்புவது போன்ற மாற்றத்தை உருவாக்கி விடலாம்’ என்றார். மகள் அதற்கு சம்மதிக்கவில்லை. அந்த இளைஞரால், தாய்க்கும்-மகளுக்கும் இடையே சண்டை உருவாகிவிட்டது.
கவுன்சலிங்கில் அந்த பெண் கூறிய குற்றச்சாட்டுகள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தன. ‘அந்த இளைஞனிடம் இருந்த சுபாவ குறைபாடுகளை எந்த பெண்ணாலும் ஏற்றுக் கொள்ள முடியாது’ என்பதை தாயாருக்கு உணர்த்திய பின்பும், அவர் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பதுபோல் அந்த இளை ஞனின் பக்கமே நின்று வாதிட்டார்.
மூன்றாவது சம்பவத்தில், திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு பிரச்சினை பெரிதாக வெடித்து, திருமணத்தை நிறுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. அந்த இளைஞனின் பழைய காதலில் நடந்த சில அசிங்கங்கள், மிக தாமதமாகவே நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரின் கவனத்திற்கு வந்தது. மிகுந்த மனஉளைச்சலோடு அவர்கள் திருமணத்தை ரத்து செய்தார்கள்.
ஆனால் அதற்கும் சில நாட்களுக்கு முன்புதான் ‘திரு மணத்திற்கு முந்தைய வீடியோ ஷுட்டிங்கில்’ அந்த ஜோடி கலந்து கொண்டிருந்தது. அப்போது மாப்பிள்ளை வீட்டார் ஏற்பாடு செய்திருந்த வீடியோ கிராபர் அவர்கள் இருவரையும் இணைத்து நெருக்கமாக பல காட்சிகளை படமாக்கியிருந்தார். அவளும் வருங்கால கணவர்தானே என நினைத்து அவனது மார்பில் எல்லாம் சாய்ந்து, டூயட்பாடும் மூடில் ஏகப்பட்ட ‘போஸ்’ கொடுத்திருந்தாள். திரு மணத்தை ரத்து செய்துவிட்ட நிலையில் அந்த வீடியோ பதிவுகளை பெற்று அழிப்பது பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. போலீஸ் தலையீட்டின் பேரில்தான் அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இப்படி திருமணங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவது பெரும் பொருள் இழப்போடு, மிகுந்த மனஉளைச்சலையும், தேவையற்ற பல பிரச்சினைகளையும் உருவாக்கிவிடுகிறது. திருமணம் நடந்த பின்பு இருவருக்கும் பிடிக்காமல் போய், விவாகரத்து செய்யும்போது எத்தகைய நெருக்கடிகள் ஏற்படுமோ அதுபோல், திரு மணம் நெருங்கி வரும்போது ரத்து செய்வதாலும் ஏகப்பட்ட நெருக்கடிகள் ஏற்படுகின்றன. சம்பந்தப்பட்ட இளைஞன், இளம் பெண் அவர்களது குடும்பங்கள் அனைத்துமே அந்த நெருக்கடிகளில் சிக்கிக் கொள்கின்றன. அதில் இருந்து எல்லோராலும் அவ்வளவு எளிதாக மீண்டுவர முடிவதில்லை. அதனால் அவர் களது மனநலனும், உடல் நலனும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
நிச்சயதார்த்தத்திற்கு தயாராவதற்கு முன்பே, திருமண வாழ்க்கையை பற்றி இன்றைய இளைஞர்களும், இளம் பெண்களும் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். அதில் இருகுடும்பத்தாருக்கு இருக்கும் கடமைகளையும், தங்களுக்கு இருக்கும் பொறுப்பு களையும் உணர்ந்துகொள்ளவேண்டும். திருமண ஏற்பாட்டில் மிகப்பெரிய கூட்டு முயற்சி இருக்கிறது.
ஒருங்கிணைந்த உழைப்பு இருக்கிறது. அதன் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி பலரும் அந்த பந்தத்தை மனப்பூர்வமாக ஏற்று, அதில் மனதளவில் ஒன்றிப்போய் விடுகிறார்கள். அதனால் அதில் ஏற்படும் தோல்வியை அவ்வளவு எளிதாக ஜீரணிக்க முடிவதில்லை. இதை எல்லாம் நன்றாக உணர்ந்து இளைஞர்களும், இளம்பெண்களும் திருமண முடிவினை எடுக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் தலையாட்டிவிட்டு திருமணத்திற்கு சில நாட்கள் இருக்கும்போது ‘தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை’ என்று கூறி மற்றவர்களுக்கு வலியை கொடுக்கக்கூடாது. இதில் பெற்றோரின் பங்கும் முக்கியமானது. இத்தகைய நிகழ்வுகளில், பெற்றோர் கீழ்கண்ட ஐந்து விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்.
ஒன்று: வரனையோ, பெண்ணையோ தேர்ந்தெடுக்கும்போது பழைய கால நினைவில் இருக்கவேண்டாம். குடும்பம், சமூகத்தில் அவர்களது அந்தஸ்து போன்றவைகளை மட்டும் பார்த்தால்போதும் என்று கருதாமல், சம்பந்தப்பட்ட அந்த இளைஞனின் (அல்லது இளம் பெண்ணின்) பின்னணியை நன்றாக ஆராயுங்கள். நவீன முறைகளை கையாளுங்கள். அவர்களது சமூக வலைத்தள பங்களிப்புகளையும் கவனத்தில் கொள்ளுங்கள். திருமணத்திற்கான சம்மதத்தை அவர்களிடமே (வரன் அல்லது பெண்ணிடம்) நேரடியாக பெறுங்கள். திருமண வாழ்க்கைக்குதக்கபடி அவர்கள் வாழ்க்கையை திருத்தி அமைத்துக்கொள்ளச் சொல்லுங்கள்.
இரண்டு: உங்கள் மகனுக்கோ, மகளுக்கோ நிச்சயதார்த்தம் நடந்து, திருமணத்தை நோக்கி நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தாலும் விரும்பத்தகாத விஷயம் பற்றி கேள்விப்பட்டால், உடனே அதுபற்றி முழுமையாக விசாரியுங்கள். தேவைப்பட்டால் திருமணத்தை நிறுத்திவிடுங்கள். மூடி மறைத்து செய்யப்படும் திருமணங்கள் வெற்றியடைவதில்லை.
 
மூன்று: பணத்தை வாரி இறைத்தால் உங்கள் செல்வாக்கு உயரும் என்பது தவறானது. ஆடம்பரம் திருமண வாழ்க்கைக்கோ, மகிழ்ச்சிக்கோ எந்தவிதத்திலும் உதவாது என்பதை உணர்ந்து நிச்சயதார்த்தம், திருமணம் போன்றவைகளில் பணத்தை வாரிக்கொட்டாதீர்கள். ஆடம்பரம், திரு மணத்தின் மீதான அச்சத்தை உருவாக்கும்.
நான்கு: திருமணம் நடந்து முடியும் வரை இருவரையும் நெருங்கிப்பழக அனுமதிக்காதீர்கள். அதுபோல் நிச்சயதார்த்தத்திலோ, அதற்கு பின்போ நெருக்கமாக படம், வீடியோ போன்றவைகளை எடுக்க அனுமதிக்க வேண்டாம். பின்பு அதுவே பெரும் தலைவலியை தருவதாக அமையலாம்.
ஐந்து: ஒருவேளை திருமணத்தை ரத்துசெய்யவேண்டிய சூழ்நிலை வந்தாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். நிதானமாக பிரச்சினையை கையாளுங்கள். குற்ற உணர்வுக்கு உள்ளாகாதீர்கள். அதை ஒருகெட்ட கனவாக மறந்துவிட்டு விரைவாக அதில் இருந்து மீண்டு வரும் வழிகளை ஆராயுங்கள். மீண்டுவருவதற்கான வழிகள் பிரகாசமாக இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *