அதிகாரத்தையும், பணத்தையும் துறந்த ஒரே மக்கள் சேவகன் நான் மாத்திரமே! – மன்னாரில் மைத்திரி பெருமிதம்

அதிகாரங்களையும், பணத்தையும் துறந்த ஒரே மக்கள் சேவகன் தான் மாத்திரமே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நீலப் பசுமை யுகத்தை நோக்கி அரசு முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஏற்ப முன்னெடுக்கப்படும் வனரோபா தேசிய நிகழ்ச்சித் திட்டம் நேற்று மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“இவ்வாறான சுற்றாடல் மாநாடுகளை நாட்டின் பல மாவட்டங்களிலும் நடத்தி வருகின்றோம். அதேபோன்று போதைவஸ்துக்கு எதிரான மாநாடுகளையும் பல மாவட்டங்களிலும் நடத்தி இருக்கின்றோம். சிறுவர்களைப் பாதுகாப்பது தொடர்பான பல மாநாடுகளையும் நடத்தி இருக்கின்றோம்.

அந்த அனைத்து வேலைத்திட்டங்களும் ஜனாதிபதி செயலகத்தினூடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நான் சுற்றாடல் அமைச்சைப் பொறுப்பேற்றுக் கொண்டமை குறித்து பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
எனக்கு முன் இருந்த ஜனாதிபதிகள் அனைவருமே முதல் முதலாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டபோது நிதி அமைச்சையே தெரிவு செய்து கொண்டனர்.

ஆனால், நான் நிதி அமைச்சை ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு முன்னால் இருந்த ஜனாதிபதிகள் அனைவரும் அதிசொகுசு வாழ்கையை வாழ்ந்தனர். ஆனால் நான் அதிகாரங்களையும், பணத்தையும் துறந்த ஒரே மக்கள் சேவகனாகவே இருக்கின்றேன்.

எனக்குப் பணம் தேவையில்லாத காரணத்தினாலேயேதான் நான் நிதி அமைச்சைக்கூடப் பெற்றுக்கொள்ளவில்லை. இன்னும் ஒரு வருடத்துக்குப் பிறகு தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதிக்கு எனக்கு இருக்கும் அதிகாரங்கள் கூட இருக்கப்போவதில்லை” – என்றார்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான மஹிந்த சமரசிங்ஹ, மஹிந்த அமரவீர, றிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்கள் ஸ்ரீயானி விஜேவிக்ரம, வீரகுமார திசாநாயக்க, பிரதியமைச்சர்கள் அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க, மன்னார் மாவட்ட செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பாதுகாப்புத்துறை பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதேநேரம், 2018 தேசிய மரநடுகை நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மன்னார் மடு வீதி, தம்பனைக்குளம் பிரதேசத்தில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *