நவம்பர் 2இல் தலைவராகின்றார் மஹிந்த! – கட்சி மாநாட்டை தடல் புடலாக நடத்த ஏற்பாடு

மாகாண சபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு வியூகம் வகுத்துவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அதன் ஓர் அங்கமாக எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதி கட்சி மாநாட்டை பெருமெடுப்பில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

கட்சியின் புதிய யாப்பு, கொள்கைத் திட்டங்கள் ஆகியன அன்றைய தினம் வெளியிடப்படவுள்ளதுடன், தலைமைப் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன வெற்றிவாகை சூடிய பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பையும் கைப்பற்றினார். இதனால், சீற்றமடைந்த மஹிந்தவும், அவரின் சகாக்களும் பொதுத் தேர்தல் வரை பொறுமை காத்தனர்.

பொதுத்தேர்தல் முடிவுகளும் மைத்திரிக்கு சாதகமாக அமைந்ததாலும், மஹிந்தவின் சகாக்கள் ஓரங்கட்டப்பட்டதாலும் தனித்து இயங்கும் முடிவை மஹிந்த எடுத்திருந்தார். எனினும், தனிக்கட்சி ஆரம்பிக்கும் முடிவை அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

தனது சகோதரரான பஸில் ராஜபக்ஷ ஊடாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். கட்சியின் தலைமைப் பொறுப்பை தனது விசுவாசியான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுக்கு வழங்கினார்.

கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தாமரை மொட்டு சின்னத்தில் களமிறங்கி பெருவெற்றியடைந்தது.

இதையடுத்தே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குத் தலைமை தாங்கும் முடிவை மஹிந்த எடுத்தார்.

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எவ்வளவுதான் பலப்படுத்தினாலும் பண்டாரநாயக்க குடும்பத்துக்கே புகழ் சென்றடைகின்றது. எனவே, ராஜபக்ஷக்களின் பெயரை சொல்வதற்கு கட்சியொன்று அவசியம்” என்று மஹிந்தவுக்குப் பலதரப்பினரும் ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே நவம்பர் மாதம் 2ஆம் அதோகதி மேற்படி கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்த ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாகாண சபைகளுக்கான தேர்தல் அடுத்தாண்டு முதல் காலாண்டுக்குள் நடைபெறும் எனக் கூறப்படுவதால் அதை மையப்படுத்தி ஆரம்பகட்ட பிரசாரமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாடு நடத்தப்படலாம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *