இலங்கைத் தமிழருக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் தமிழக அரசு! – செல்வம் எம்.பி கோரிக்கை

“இந்தியாவின் தமிழக அரசு, இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளின்போது தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்; ஆதரவும் தர வேண்டும்.”

– இவ்வாறு நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 102ஆவது பிறந்த தின நிகழ்வு அவர் பிறந்த ஊரான கண்டியில் நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும், தெரிவித்ததாவது:-

“இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களுக்கும் தமிழ்நாடு ஒரு காவலன் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எமக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக உலக ரீதியான ஓர் ஆதரவை வழங்குகின்றது. நாங்கள் உங்களுக்காக இருக்கின்றோம் என்று அவர்கள் சொல்கின்றார்கள். இதனால் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கின்றோம்.

மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். விட்டுச் சென்ற பணிகளை மறைந்த அம்மையார் ஜெயலலிதா எமக்குத் தொடர்ந்தும் பணிகளைச் செய்து வந்தார். அவர் வழியில் இன்னும் எமக்குப் பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *